×

17 வயது முடிந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம், 18 வயதாகும் போது பெயர் சேர்க்கப்படும்: சத்யபிரதா சாகு தகவல்..!

சென்னை: இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னையில் வெளியிட்டார். 2. 01.01.2023-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 09.11.2022 அன்று வரைவுப் பட்டியல் வெளியீட்டுடன் தொடங்கியது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க/நீக்க/திருத்த/இடம் மாற்றம் செய்ய விண்ணப்பங்கள் 09.11.2022 -ஆம் தேதியிலிருந்து 08.12.2022-ஆம் தேதிவரை பெறப்பட்டன. மேற்கண்ட சிறப்பு சுருக்கமுறை திருத்த காலத்தின்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்காக 10,54,566 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 10,17,141 விண்ணப்பங்கள் (ஆண்கள் 4,70,291 ;  பெண்கள் 5,46,225 ;  மூன்றாம் பாலினத்தவர் 625) ஏற்கப்பட்டு பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

பெயர் நீக்கலுக்காக 8,43,007 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 8,02,136 வாக்காளர்களின் பெயர்கள் இடப்பெயர்ச்சி (5,32,526), இறப்பு (2,47,664) மற்றும் இரட்டைப் பதிவு (21,946) ஆகிய காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளன. மேலும், 2,15,308 வாக்காளர்களின் பதிவுகளில் (ஆண்கள் 1,13,047 ;  பெண்கள் 1,02,165 ;  மூன்றாம் பாலினத்தவர் 96) திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் 6,20,41,179 வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் 3,04,89,866; பெண் வாக்காளர்கள் 3,15,43,286 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 8,027 பேர்) பதிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட 27-சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 6,66,295 வாக்காளர்கள் உள்ளனர்.

(ஆண்கள் 3,34,081; பெண்கள் 3,32,096; மூன்றாம் பாலினத்தவர் 118). இதற்கு அடுத்தப்படியாக கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட 117-கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 4,57,408 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 2,27,835;  பெண்கள் 2,29,454 ;  மூன்றாம் பாலினத்தவர் 119). மாறாக, தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 18-துறைமுகம் சட்டமன்றத் தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,70,125 ஆவர். (ஆண்கள் 88,396; பெண்கள் 81,670; மூன்றாம் பாலினத்தவர் 59). இதற்கு அடுத்தப்படியாக இரண்டாமிடத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்குட்பட்ட 164-கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி உள்ளது.

இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,75,128 ஆவர் (ஆண்கள் 85,652; பெண்கள் 89,474 ; மூன்றாம் பாலினத்தவர் 2). 05.01.2023 அன்று வெளியிடப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 3,310 வெளிநாடுவாழ் வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்று ள்ளன. அதில் 8 வெளிநாடுவாழ்  வாக்காளர்களின் பெயர்கள் சிறப்பு சுருக்க முறைத்திருத்த காலத்தில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலில் இதுவரை, 4,48,138 வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டு மாற்றுத் திறனாளி  வாக்காளர்கள் என குறிக்கப்பட்டுள்ளார்கள். சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தில் 18-19 வயதுள்ள 4,66,374 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். (ஆண்கள் 2,52,048; பெண்கள் 2,14,171; மூன்றாம் பாலினத்தவர் 155). வாக்காளர் பட்டியலினை, தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளமான https://elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம். அதில் வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த நடைமுறை தற்போது செயல்பாட்டிலுள்ளது. 01.01.2023 அன்று 18 வயது நிரம்பிய தகுதியுள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால், கீழ்க்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கலாம்:-
i. வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் படிவம் 6-ஐ சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம்.      
ii. இணையம் மூலமாக www.nvsp.in என்ற வலைதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.
iii. கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து “Voter Helpline App” செயலியைத் தரவிறக்கம் செய்து அதன்மூலம் விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு சுருக்கமுறைத் திருத்த காலம் மற்றும் தொடர் திருத்த காலங்களில் பெறப்பட்ட முன்கூட்டிய விண்ணப்பங்கள் தொடர் திருத்த காலத்தின் போது அந்தந்த காலாண்டில் உரிய வாக்காளர் பதிவு அலுவலரால் பரிசீலிக்கப்படும். ஒரு வாக்காளர் தனது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு படிவம் 6பி-இல் 31.03.2023 வரை விண்ணப்பிக்கலாம்.  04.01.2023 அன்று வரை, தமிழகத்தில் 3.82 கோடி (61.60%) ஆதார் எண்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதற்காக சேகரிக்கப்பட்டுள்ளன. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, இரண்டு அச்சிடப்பட்ட வாக்காளர் பட்டியல் நகல்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்குமாறு அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் மென் நகலினை (புகைப்படமின்றி) வாக்காளர் பதிவு அலுவலரிடமிருந்து ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ரூ.100/-வீதம் கட்டணம் செலுத்தி பெறலாம். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி, மாவட்ட தொடர்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  பொதுமக்கள் மாவட்ட தொடர்பு மையங்களை “1950 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான தகவல்களை அறியலாம். தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் 180042521950 என்ற  கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணுடன் மாநிலத் தொடர்பு மையம் இயங்கி வருகின்றது. இவ்வாறு கூறினார்.

Tags : Satyaprada ,Sahu , Those who completed 17 years of age can apply for inclusion in voter list, name will be added after turning 18: Satyaprada Sahu Information..!
× RELATED மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை...